தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் வெயிலோடு சேர்த்து அரசியல் கட்சிகளின் பிரசாரங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் மகேந்திரனை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக சார்பில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. நடக்கப்போவது மக்களவைத் தேர்தல், ஆனால் ஸ்டாலினோ சட்டப்பேரவைத் தேர்தல் போல வாக்குறுதிகள் தருகிறார். இதிலிருந்தே உண்மை என்னவென்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், கருத்துக்கணிப்புகளை விமர்சித்துப் பேசிய அவர், தேர்தல் கருத்து கணிப்புகளில் எதுவும் உண்மை இல்லை, 2016ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் தான் தோல்வியடைவேன் என்று ஒரு தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் எனத் தெரிவித்தார்.