திருப்பூர்: காங்கிரஸ் கட்சி சார்பில், 22 வயது ஆன இளம்பெண்ணுக்கு திருப்பூர் மாநகராட்சியில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூரில் 5 வார்டுகள் ஒதுக்கி இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அப்பொழுதே அந்த 5 வார்டில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரமும் வெளியிடப்பட்டது.
அதன்படி 25 வது வார்டில் பூபேஷ் , 30 வது வார்டில் முத்துலட்சுமி , 48 வது வார்டில் விஜயலட்சுமி , 51 வது வார்டில் செந்தில்குமார் , 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 55 வது வார்டில் போட்டியிடும் தீபிகா அப்புகுட்டி என்பவர் கவனிக்கத்தக்கவராக உள்ளார். 22 வயதான தீபிகா அப்புகுட்டி சட்டக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருடைய தாய் விசாலாட்சி அதிமுக கட்சியில் திருப்பூர் மாநகரின் மேயராக பதவி வகித்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி அமமுக கட்சியில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தற்போதும் விசாலாட்சி அமமுகவில் உள்ள நிலையில், அவரின் மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், சமீபத்தில் கட்சியில் இணைந்தவருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கலாம் என்று மூத்த கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு குரல் கொடிக்க தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: Budget 2022: நாட்டின் வடகிழக்குப் பகுதி வளர்ச்சிக்கு புதிய திட்டம்