பல்லடம் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் இளைஞர்கள் பாஜகவில் இணையும் “இளைஞர்களின் சங்கமம்” என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பாரத பிரதமர் மோடியின் நல்லாட்சியையும் பாஜகவின் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு தேசிய நீரோட்டமான பாஜகவில் இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
உயர்மின் கோபுர விவகாரத்தில் காங்கேயத்தில் அளித்த பேட்டி திரித்து ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் விவசாய நிலங்கள் வழியே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு மாற்றுவழி திட்டம் இல்லாதபோது மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆய்வு செய்து உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து சான்றிதழ் வழங்குபவர். இதில் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றுதான் தெரிவித்திருந்தேன்.
இருப்பினும் விவசாயிகளின் ஒரு சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு, நானும் விவசாயி என்பதால், ரத்த சொந்தமான விவசாயிகளுடன் வாதிட விரும்பவில்லை. எனக்காக அறிவித்த ஒரு கோடி ரூபாயை, விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.
மேலும், இந்து பெண் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட ஏபிவிபி தலைவருக்கு எய்ம்ஸ் மருத்துவ குழுவில் உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், குடியிருப்பில் இருவருக்கும் இடையேயான பிரச்னை என்பதால், அது அவர்களுக்குள் சுமூகமாக தீர்க்கப்பட்டு வட்டதாகவும், ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்விரண்டையும் ஒரே மாதிரி பார்க்க முடியாது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வேல் யாத்திரை சஷ்டி நாளில் குறிக்கப்பட்டு பயண திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் டிசம்பர் 6ஆம் தேதியில் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என காங்கிரஸ் கட்சி பிளவு அரசியல் செய்வதாகவும், அனைத்து மதத்திற்கும் பொதுவான கட்சியாக பாஜக இருப்பதாகவும் கூறினார்.