தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (மே 27) நடைபெறுமென்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்துவதற்கான மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், பரமக்குடி என நான்கு மையங்களில் 99 ஆயிரத்து 578 மாணவ - மாணவிகள் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கி ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து 928 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, ஆசிரியர்களுக்கு கிருமி நாசினிகள் கொடுக்கப்பட்டு வெப்ப பரிசோதனை செய்த பின் முகக் கவசம் கொடுக்கப்பட்டு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனை துணை சுகாதாரத்துறை இயக்குநர், முதன்மை கல்வித்துறை அலுவலர் கண்காணித்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, தி பிரண்ட் லைன் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் விவேகம் மெட்ரிக் மற்றும் உடுமலைப்பேட்டை ஆர்.ஜி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்துறையின் சார்பில் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிக்காக முதன்மை தேர்வாளராக 200 நபர்களும், கூர்ந்தாய்வு அலுவலராக 200 நபர்களும் உதவி தேர்வாளராக ஆயிரத்து 200 நபர்களும் இதுதவிர 87 அலுவலக பணியாளர்களும் உள்ளனர்.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது, அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவே பேருந்தில் ஆசிரியர்கள் அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், ”ஜூன் 15ஆம் தேதி துவங்கவுள்ள பத்தாம் வகுப்பு தேர்விற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக நோய்த் தொற்று எதுவும் இல்லாத நிலையில் கூடிய விரைவில் திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம்!