தூத்துக்குடி: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தபால் தலையை வெளியிட்டுவருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் தபால் தலை வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அங்கு அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "சுதந்திர அமிர்த பெருவிழா ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொண்டாடப்பட இருக்கிறது.
இது போன்று விழாக்கள் மூலம் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழுமையான சரித்திரம் வெளியே வரும். இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட விழாக்கள் முக்கியமானது. அதனால் தான் ஒண்டிவீரன் விழாவில் கலந்து கொள்ள இரண்டு ஆளுநர்கள் இங்கு வந்துள்ளோம்.
இப்படிப்பட்ட வீரர்களினால்தான் நாம் இன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். பாட புத்தகங்களில் இத்தகைய வீரர்களின் வரலாறு இன்னும் அதிகமாக இடம்பெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்தநாள் விழா...திமுகவினர் மரியாதை