தூத்துக்குடியில் சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரேமானந்தன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்தவரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் திருச்செந்தூர் காயாமொழி வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த முருகபெருமாள் மகன் திருமால் (31), திருச்செந்தூர் குதிரைமொழி கரிசன்விளை பகுதியைச் சேர்ந்த மணி மகன் கணேசன் (53), அவரது மனைவி பார்வதி (51) ஆகிய மூவரும்,
திருச்செந்தூர் காயாமொழி இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் ரமேஷ் (31) என்பவரிடம் அறிமுகமாகி அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி இரண்டு லட்சம் ரூபாயை முன்பணமாக வாங்கியுள்ளனர்.
குற்றவாளிகள் கைது
இதனையடுத்து 21ஆம் தேதியன்று மீண்டும் 50 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அரசு வேலைக்கான பணியாணையை வழங்கிச் சென்றுள்ளார். அதன்பின்னர் அது போலியானது என்று தெரிந்ததும் ரமேஷ் உள்ளிட்ட மூவரிடம் சென்று பணத்தைத் திரும்பக் கேட்டதற்கு, திருப்பித் தர முடியாது எனக் கூறியுள்ளனர்.
இதேபோன்று வேறு சிலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக போலி நியமன ஆணை தயாரித்து அதில் போலியான அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி கையெழுத்திட்டு மோசடியாகப் பணத்தை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் நேற்று (அக். 7) கைதுசெய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மோசடி நபர்களைக் கைதுசெய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க: ஏடிஎம் கார்டு மூலம் ரூ.40 ஆயிரம் திருட்டு