தூத்துக்குடியில் கரோனா இரண்டாம் கட்ட பரவல் மற்றும் ஊரடங்கு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட காவல்துறை சார்பில் குரூஸ்பர்னாந்து சிலையருகே இன்று (ஏப். 24) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர், முகக்கவசம், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.
பின்னர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் பொது இடங்களுக்குச் செல்கையில் கட்டாயம் வாய், மூக்கு பகுதி மூடி இருக்குமாறு முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
நாளை(ஏப்.25) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இன்று (ஏப். 24) இரவு 10 மணி முதல் நாளை மறுநாள்(ஏப்.26) காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பொது மக்கள் வெளியே வரலாம்.
அது தவிர வேறு எக்காரணத்திற்காகவும் பொது மக்கள் வெளியே சுற்றித் திரியக்கூடாது. முழு ஊரடங்கை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் வாகன தணிக்கைகள் நடைபெறும். தேவையின்றி ஊர்சுற்றுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் நிகழ்ச்சிக்கான அழைப்பு கடிதத்தை வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.