குடியிருக்கும் வீட்டை ஒட்டினாற்போல் தன் மனைவிக்கு நினைவு மண்டபத்தை எழுப்பியுள்ளார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செ.மாடசாமி. தனது மனைவியுடன் அரை நூற்றாண்டுகள் வாழ்ந்த இவரால் அவருடைய இழப்பை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரிவின் துயர் தாங்க முடியாமல் மனைவியின் உருவத்தைச் சிலையாக வடித்து சிறப்பு பூஜை, அன்னதானம் போன்றவற்றை செய்து வருகிறார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தத் தம்பதியினர் மாடசாமி-வள்ளியம்மாள். வள்ளியம்மாளுக்கு தனது கணவரின் நலம்தான் முக்கியம். அவருக்காக தனது வாழ்நாள் முழுக்க செலவிட்டாதால் என்னவோ, மாடசாமிக்கு வள்ளியம்மாள் முகம் காணாத நாள்கள் வேதனையிலும் வேதனையானது.
தான் பத்தாம் வகுப்பு முடித்ததுமே ராணுவத்திற்குச் சென்று விட்டதாகத் தெரிவிக்கும் மாடசாமி, 1975ஆம் ஆண்டு வரை ராணுவத்தில் சேவையாற்றியுள்ளார். பின்னர் மத்திய கனநீர் ஆலையில் செக்யூரிட்டி ஆபிசராக பணியில் சேர்ந்து அலுவலக உதவியாளராக பணியாற்றி 2000இல் ஓய்வு பெற்றுள்ளார்.
காதலே... காதலே...
மாடசாமி-வள்ளியம்மாள் தம்பதியினருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். சுமாராக 48 ஆண்டுகள் இவர்களின் மண வாழ்க்கை மெல்லிசை போல இனிமையாகவே இருந்துள்ளது. தனது கணவரின் வாழ்க்கை தான் வள்ளியம்மாளின் ஆணிவேர். அவருக்கு அச்சாணியாக சுழன்ற வள்ளியம்மாள் தன்னைக் கவனிக்க மறந்து போனார். திடீரென உடல்நலக் குறைவால் படுத்த அவரை காப்பாற்ற கணவர் மாடசாமி எவ்வளவோ முயன்றும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இயற்கை எய்தினார்.
வீட்டின் எந்தத்திசையை நோக்கினாலும் மனைவி ஞாபக அலைகளால் மூழ்கினார் மாடசாமி. தங்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையைக் குறித்து அடையாளப்படுத்த நினைத்தார். இருவரின் அன்பும் காலத்தால் அழியாதது; அள்ள அள்ள குறையாதது.
தனது மனைவியின் மீதான அன்பை வெளிக்காட்ட நினைத்த மாடசாமி அவருக்காக சிலை வைக்க முடிவு செய்தார். கொஞ்சமும் தாமதிக்காமல் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடிக்குச் சென்று, தனது மனைவி வள்ளியம்மையை சிலையாக வடிவமைத்து வாங்கி வந்தார். வீட்டு முகப்பிலேயே மண்டபம் எழுப்பி அச்சிலையை காவல் தெய்வமாக நிறுவி இன்றளவும் வழிபட்டு வருகிறார்.
கவவுக்கை நெகிழா!
’காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்’ (சிலப்பதிகாரம்: 1: 61-62) என்பதைப் போல தனது மனைவியின் கரங்களை மரணத் தருவாய் வரையிலும் பற்றியிருந்தார் மாடசாமி. அது மட்டுமின்றி தனது மனைவி சிலை தனித்து நிற்பது பொறுக்காமல் அடுத்த ஆண்டே தன் உருவத்தையும் அதே இடத்தில் சிலையாக்கியுள்ளார். உற்றார், ஊரார் ஆயிரம் விமர்சனங்களை வைத்த போதிலும் இதைச் செய்ய அவர் துளியும் தயங்கவில்லை. மனைவி வள்ளியம்மாளின் தனிமைத் தொடரக் கூடாது என நினைத்தார்.
வாழும் காலம் வரை தன்னை சுமந்த மனைவியை வாழ்க்கை முழுவதும் தாங்கி நிற்க 4 தூண்கொண்ட அமைப்பில் மண்டபம் எழுப்பியுள்ளார். இந்த மண்டபத்தில் உள்ள 4 தூண்களும் குடும்பத்திலுள்ள நால்வரையும் (மாடசாமி, அவரது மூன்று பிள்ளைகள்) குறிப்பிடும் வகையில் கல்வெட்டுகளில் பெயர் எழுதி பதித்துள்ளார்.
மனைவி உயிரிழந்த சனிக்கிழமையை துக்க நாளாக அனுசரிக்கும் இவர், ஒவ்வொரு வாரமும் அந்தக் கிழமையில் கறுப்புச் சட்டை அணிந்து கொள்கிறார். மனைவியின் பிறந்த நாள், இறந்த நாள் இருநாள்களிலும் பிறருக்கு உதவுகிறார்.
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்!
திருமண பந்தத்தில் இருவருக்குள்ளும் எவ்வித மனக்கசப்பும் இருந்ததில்லை. கடுகளவுகூட தங்களுக்குள் கசப்பான நினைவில்லை என்கிறார், மாடசாமி. மது அருந்தும் பழக்கமுடைய இவரிடம், உடல் நிலை சரியில்லாத காலத்தில் மனைவி வள்ளியம்மாள் ’இனி குடிக்காதீங்க ஐயா’ எனக் கேட்டுள்ளார். அதை அக்கணமே பின்பற்ற தொடங்கிவிட்டார் மாடசாமி.
தனது மனைவி இல்லாத வாழ்க்கையை அவருடன் வாழ்ந்த நினைவுகளுடன் கழித்து வரும் மாடசாமி, அவரது உருவம் பொரித்த மோதிரம், செயின் உள்ளிட்டவற்றை அணிந்து மனதைத் தேற்றிக்கொள்கிறார். அடுத்த பிறவி என்பது உண்மை எனில் மீண்டும் வள்ளியம்மையே தனக்கு மனைவியாக வரவேண்டும் என மனதுருகும் மாடசாமி... நிகழ்கால ஷாஜகான் என்றால் அது மிகையல்ல.!
இதையும் படிங்க:இறந்த மனைவிக்கு சிலை அமைத்த மதுரை தொழிலதிபர்...!