தூத்துக்குடி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (செப்.28) தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உதயா எசென்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் கடை மற்றும் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் கிளாஸ் கப், உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங், சுகாதார நகர் நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த கடையின் உரிமையாளர், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், சோதனைக்காக சென்ற தற்காலிக மாநகராட்சி ஊழியர் கணேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீது கடை உரிமையாளர் தாக்குதலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடை மற்றும் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும், வடபாகம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை...மத்திய அரசு