தூத்துக்குடி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019ஆம் ஆண்டுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும்; ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்; மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மாரிப்பாண்டி முன்னிலை வகித்தார்.
இதில் மாநிலத் தலைவர் பெருமாள்சாமி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் சங்கரசுப்பு, பொருளாளர் சூரிய பிரம்மன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'மகனை போலீசார் அடித்து கொன்றுள்ளனர்' - ராஜசேகரின் தாய் பேட்டி!