தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை அடுத்து 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை சமூகநல நிதியின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திவருவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகள் உள்பட மொத்தம் 270 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புப் பெற்று தருவதற்காக மொத்தம் ரூ.35 லட்சம் ரூபாய் பணத்தை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைப்புத்தொகை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பண்டாரம்பட்டி ஊர்மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதற்கு பண்டாரம்பட்டி ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரில் ஒருசிலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படலாம். ஆனால் பொதுவாக பண்டாரம்பட்டி ஊர்மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக உள்ளனர் என கூறுவது முற்றிலும் தவறு எனக்கூறி ஊர் பொதுமக்கள் நேற்று முன்தினம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சிலர் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், பண்டாரம்பட்டியில் வசித்துவரும் தங்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துவருவதாகவும் இதனால் தங்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்று தருவதற்காக ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சமூகநல நிதியின் மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் பணம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.
சமூக வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் இதை செய்தது. ஆனால் இது பிடிக்காத ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை நடத்திவருகின்றனர். எனவே இதை மாநகராட்சி நிர்வாகம் தடுத்துநிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.