தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சைப் பிரிவினை பார்வையிட்டு நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்யும் நிலை உள்ளதால் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு மழைநீர் தேங்குவது, நன்னீர் தேங்கி நிற்பதும் சவாலாக இருந்து வருகிறது. தூத்துக்குடியில் கூட பலர் காய்ச்சல் மற்றும் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து சரியான சிகிச்சை பெற்றால் நூறு விழுக்காடு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
அங்கு காய்ச்சலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுத்துள்ளனர். டிசம்பர் மாதம் வரையிலும் காய்ச்சல் பாதிப்பு இருக்கக்கூடும் என்பதால், காய்ச்சலை கட்டுப்பட்டுத்த தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மேலும், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது' எனக் கூறினார். ஆய்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சின்னப்பன் எம்எல்ஏ, சண்முகநாதன் எம்.எல்.ஏ, ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - கார் சர்வீஸ் சென்டர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்!