தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் பிராண வாயு தயாரிப்பது தொடர்பாக நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கலந்துகொள்ள விடாமல் எதிர்ப்பாளர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள், "நாடே பெருந்தொற்று காரணத்தினால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. ஏராளமான உயிர்கள் பிராண வாயு பற்றாக்குறையால் மரணிக்கின்றனர். இந்தச் சூழலில் வேதாந்தா நிறுவனம் பிராண வாயுவை தயாரித்து இலவசமாக வழங்குகிறோம் என்று சொல்வதை அனைத்து தரப்பினரும் முழுமனதோடு வரவேற்க வேண்டும்.
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்தரப்பினர் கண்மூடித்தனமாக இதை எதிர்த்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் சார்பாக கலந்துகொள்ளச் சென்ற எங்களை கூட்டத்தில் பங்கேற்க விடாமல் ரகளை செய்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது வருந்தத்தக்கது.
இதில் வேற்றுமைகளை மறந்து, எதிர்தரப்பினரும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்றனர்.