தமிழக அரசின் ஆணைக்கு இணங்க மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்வது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தை அணுகி முடித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியது. தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்துக்கு அபராதம் விதித்து ஆலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
”சகலமும் நானென்று ஆணவ பணச்செருக்கோடு இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் இன்று சாவுமணி அடித்துள்ளது. இந்த தீர்ப்பை ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக முழு மனதுடன் வரவேற்கிறோம்.
இனியாவது தமிழக அரசு இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மண்ணில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையின் கடைசி செங்கல் அகற்றப்படும் வரை இது ஓயாது” என்றார்.