குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, திக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு தனது கையெழுத்தை முதல் கையெழுத்தாகச் செலுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுத் தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், "இந்த நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து பிஜேபி அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடை போன்றது. யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சட்டத்தின் மூலமாக அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதன் பாதிப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். எனவே, அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டு அந்தக் கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நாட்டின் எந்தப் பிரச்னைக்கான தீர்வையும் தராத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டானது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத்தான் மேலும் அதிகப்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு