தூத்துக்குடி: தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தை. வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு மதுரை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடு வளர்ப்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் வருகை தருவது வழக்கம்.
தற்போது கரோனா ஒமைக்ரான் நோய் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு வருகை தந்த வெளி மாவட்ட ஆடு வியாபாரிகள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சனிக்கிழமை காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் சந்தையில் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஆட்டுச்சந்தை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு வியாபாரிகள் எட்டயபுரம் நகரின் பல்வேறு வீதிகளில் ஆங்காங்கே நின்றுகொண்டு ஆடுகளை விற்பனை செய்தனர்.
இது குறித்து ஆடு வியாபாரி செய்யது முகம்மது மற்றும் அஸ்ரப் ஆகியோர் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் 10 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கும்.
ஆனால் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஆட்டுச்சந்தை நடைபெறாததால் 10 லட்சத்துக்கு கூட விற்பனை நடைபெறவில்லை. ஆட்டுச் சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகளை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.
இரவு நேர ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை காலையில் ஆட்டுச் சந்தை நடைபெறும் என நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். முன்னதாகவே இது குறித்து அறிவிப்பு எதுவும் கொடுக்கப்படாததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆடு வளர்ப்பவர்கள், விலைக்கு வாங்க வந்தவர்கள் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனால் போக்குவரத்து செலவு வாகனங்களுக்கான என பல வகையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளிய நெடுஞ்சாலைத் துறை - கண்ணீர் விட்ட பொதுமக்கள்