தூத்துக்குடி: உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் சட்ட விரோத மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாங்கைகுளம் கருமேனி ஆறு பகுதி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று (ஜூலை 4) மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய குணசீலன் என்பவர், 'தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நிலத்தடி நீர் இல்லாத கருமையான பகுதியாகும். பருவமழை பல ஆண்டுகள் பொய்த்து போனதாலும் பிற காரணங்களினாலும் உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலத்தடி நீரில் கடல் நீர் புகுந்து விட்டது.
இதனால், எங்கள் பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், எங்கள் பகுதி மக்களில் பலர் விவசாயம் இல்லாமல் பிழைப்புக்காக வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், அருகில் உள்ள சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திலும் மக்கள் இடப்பெயர்ச்சி காரணமாக சாத்தான்குளம் என்ற சட்டமன்றத் தொகுதியே இல்லாமல் போய்விட்டது.
எனவே, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலத்தடி நீரை காக்கவும், விவசாயத்துக்கு புத்துயிர் கொடுக்கவும் விவசாயிகளை ஒன்று சேர்த்து கடந்த காலங்களில், பராமரிப்பு இல்லாமல் இருந்த பல்வேறு நீர்நிலைகளை பொதுமக்களின் நிதி பங்களிப்பில், தூர்வாரி எங்கள் பகுதியின் நிலத்தடி நீரை காக்க நாங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக கடந்த 2019-2020 காலகட்டத்தில், குளங்களில் இருந்து விவசாயத்திற்கு மண் எடுக்க அனுமதிக்கும் ஜி 0.50 மற்றும் தனியார் பட்டா இடங்களில் விவசாய பயன்பாட்டுக்காக திருத்தம் செய்வதாகக் கூறிக் கொண்டு, கனிமவளத்துறையின் அனுமதி சீட்டு போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, அரசின் குளங்கள் மற்றும் தனியார் பட்டா இடங்களில் பல்வேறு விதி மீறல்கள் சட்டவிரோதமாக நடந்துள்ளன.
எனவே, மேற்படி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வெண்ணிமடைந்த அய்யன் சாஸ்தா கோயில் அருகே புதிய குளம் அமைக்கிறோம் எனும் பெயரில் நீதிமன்ற ஆணையை மீறி, மண் கொள்ளையடிக்க அரசு அனுமதி கொடுக்கக் கூடாது.
இவ்வாறு சட்ட விதிகளை மீறி மண் கொள்ளை நடக்கும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம். கல்லாமொழி கீழ திருச்செந்தூரில் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து கூறி, தடுத்து நிறுத்தினோம். அத்துடன், இதேபோல வெள்ளாளன் விளை, நங்கை மொழி, செட்டியாபத்து உள்ளிட்ட கிராமங்களில் புதிய குளம் உருவாக்குகிறோம் என்ற பெயரில் ரூ.100 கோடி மதிப்பில் மணல் அள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புகார் கொடுத்தால் குண்டர் தடுப்பு சட்டம் போடப்படுகிறது. ஆகவே, மணற்கொள்ளையடிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொது மக்களை திரட்டி போராட்டம் செய்ய உள்ளோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: திண்டுகலில் திமுக பிரமுகர் மணல் கொள்ளை- நடவடிக்கை எடுக்குமா அரசு?