ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையம் தூத்துக்குடி மற்றும் சென்னையில் உள்ள முகாம் அலுவலகங்களில் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை நடைபெற்ற 24 கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் 25 ஆவது கட்ட விசாரணை, கடந்த 22 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “இதுவரை துப்பாக்கிச்சூடு தொடர்பாக 943 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 26 வது கட்ட விசாரணை மார்ச் 15 ஆம் தேதி தொடங்கலாம். ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக ஏற்கனவே 27 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிந்துள்ள நிலையில், தற்போது கல் எரிந்ததாக 44 பேரை கூடுதலாக குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. இந்த நாற்பத்தி நான்கு பேரிடமும் ஆணையம் விசாரணை செய்யவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்திடம் துப்பாக்கிச்சூடு குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும். அவருக்கு சம்மன் அனுப்பியபோது காணொலி மூலமாக விசாரணையில் பங்கேற்க கோரிக்கை விடுத்தார். ஆனால், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து விசாரணையில் ஆஜராகக் கூறியுள்ளோம். எனவே நிச்சயமாக ரஜினிகாந்திடம் நேரில் விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் துறையில் ஊழல்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!