தூத்துக்குடி: வடகிழக்கு பருவ மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. புரெவி புயலை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகர பகுதிகளில், நேற்று முன்தினம் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இந்தநிலையில், நேற்றும் விடிய விடிய மழை தொடர்ந்ததால் மாநகர பகுதிகளில் முட்டிக்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வ விநாயகபுரம் பகுதியில் ஏற்கனவே பெய்த மழையால் சாலையில் நீர் வடியாத நிலையில், தற்போது பெய்த மழையால் அப்பகுதியின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரும் பழுது ஏற்பட்டதால், மழை நீரை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் செல்வ விநாயகபுரம் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மழை நீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : துாத்துக்குடியில் கனமழை: மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்!