வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் பலத்த கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு பல்வேறு முன்னொச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று(டிச.3) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயகுமார், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையொட்டிய பகுதிகளில் வசித்துவரும் மக்களையும், தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள 36 வசிப்பிடங்களில் வாழ்ந்துவரும் மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உபரிநீா் வெளியேற்ற பொதுப்பணி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் கரைக்கு திரும்பவேண்டும், யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம். அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா புயலைப் போன்று அதே வலுவுடன் வருவதால் அதை கையாள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மக்களுக்கு உதவ தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மீட்பு படை, கடற்படை தயாராக இருக்கிறது. மக்களுக்குத் தேவையான அனைத்து உணவு பொருள்களும் அதிகளவில் சேமித்துவைக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை.தாழ்வான, கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்காக முகாம்கள் தயாராக இருக்கின்றன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 82 பேர் தங்க தேவையான வசதிகளுடன் புயல் நிவாரணம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரத்து 505 ஏரிகளில் 985 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் கரை உடையும் பகுதியில் கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,200 படகுகள் கரை திரும்பியுள்ளனர்.
மீனவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதாக தகவல் வந்தது. குமரி மாவட்டத்தில் கடலில் கடலில் இருந்த மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி மூலமாகவும் கடலோர காவல்படை மூலமாகவும் புயல் எச்சரிக்கை குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.”என்றார்.
இந்த கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : திமுக, பாஜக, இப்ப ரஜினி - அர்ஜுனமூர்த்தி பின்னணி?