பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்விச்சாலைகள் உலக அளவில் காலவரையறையின்றி மூடப்பட்டது. இந்தநிலையில் உலக அளவில் இரண்டாம் முறையாக வலம் வந்துகொண்டிருக்கும் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்விச்சாலைகள் முழு அளவில் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கல்விக்கூடங்களை மாணவர்களின் எதிர்காலம் கருதி திறக்கவா? வேண்டாமா? எனக்கேட்டுப் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் விருப்பத்தின் அடிப்படையில், பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரிடையாக வகுப்பு எடுப்பதற்குத் தற்போது கல்விக்கூடங்களை தமிழ்நாடு அரசு திறந்துள்ளது. இதற்காக தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இதுதவிர, மற்ற மேல்நிலை வகுப்புகளுக்கும், இடைநிலைக் கல்வி வகுப்புகளுக்கும் இணையத்தின் வழியே கல்விச்சாலைகள் கல்வி புகட்டுவதும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றன.
தற்போது கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாறுபாடு பல மாணவர்களுக்கு இன்னும் புரியாத விடயமாக உள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதற்கு கடும் சிரமங்களை மாணவர்கள் சந்தித்து வர நேரிடுகிறது. இணையதள வசதி, மொபைல் போன், ஆர்வமின்மை, அசட்டுத்தனம் போன்ற காரணிகளால் அவர்களின் கல்வி, சராசரி அளவைவிடினும்கீழ் மட்டத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கள ஆய்வு தர ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் விரும்பியது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் கள ஆய்வு செய்ய நேர்கையில் கல்வியாளர்களும், ஆசிரியர்களும் தங்களது மனதில் பதிந்த கருத்துகளை முன்வைத்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தலைவர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பவுல் ஆபிரகாம் நம்மிடையே பேசுகையில், 'மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது முற்றிலும் புதியது. ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுப்பதை மாணவர்கள் விரும்பவில்லை. ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்களை சமாளிப்பதற்கும் அவர்களின் கல்வி கற்கும் திறனைக் கண்டறிந்து மெருகேற்றுவதற்கும் பள்ளிக்கூடங்கள் உறுதுணையாக இருந்தன.
தற்போது ஆன்லைன் மூலமாக ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் வேளையில், அந்த மாணவர்கள் உண்மையில் வகுப்புகளை கவனிக்கிறார்களா அல்லது வீடியோவை ஆஃப் செய்துவிட்டு தத்தமது சொந்த வேலைகளை கவனிக்கின்றனரா? என்பது தெரியாது. வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்கும் வேளையில் ஒவ்வொரு மாணவனின் கல்வி அறிவையும், கல்வி கற்கும் திறனையும் அந்த வகுப்பாசிரியர் எடைபோட்டுவிட முடியும். ஆனால், ஆன்லைன் கல்வியில் அது சாத்தியமற்றது. இதனால், நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களின் கல்வி அறிவுகூட சராசரி அளவுக்கும் கீழே சென்று விடும் அபாயம் உள்ளது. அதேபோல் சராசரியாகப் படிக்கும் மாணவர்கள், மெல்ல கற்கும் திறன் உடைய மாணவர்கள், கற்றலில் குறைபாடுள்ளவர்களும் தங்களது கல்வித்திறனை இழந்து, கீழ்நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அப்படியொன்று நடந்துவிட்டால் அந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி கொடுத்து தேர்வுக்குத் தயார் செய்வது என்பது எளிதான காரியமல்ல.
எனவே, தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்களைத் திறந்ததுபோல மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளையும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் வகுத்து வெளியிட்டால், அதைப் பின்பற்ற ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையும் தயாராக உள்ளது. ஆன்லைன் கல்வி என்பது தவிர்க்கப்பட்டு, நேரடியாகப் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மாணவர்கள் பாடம் கற்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்' என்றார்.
அப்படியே செல்போன்கள் வைத்திருக்கும் மாணவர்களுக்கு, கிராமத்தில் இணையதள வசதிக்கான தொழில்நுட்பங்கள் இருப்பதில்லை. இதற்காக அந்த மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அவ்வூரை விட்டு, வெளியே வரக்கூடிய சூழல் உள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்க வெகுநேரம் செல்போன்களைப் பார்த்தவாறு இருக்க முடியாது என்பது இயல்பான ஒன்று. இதற்காகவும் மாணவர்கள் படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல் ஆன்லைன் வகுப்புகளைப் புறக்கணித்துச் செல்கின்றனர். மேலும் தற்பொழுது பெருகியுள்ள இணையதளப் பயன்பாடு காரணமாக, வகுப்புகளைக் காட்டிலும் விளையாட்டு, இணைய அரட்டை உள்ளிட்டவற்றில் அதிக நாட்டம் கொள்வதும் வகுப்பின் மீது மோகம் இல்லாமல் போவதற்கு ஒரு காரணம்.
தற்போது மெல்லமெல்ல பள்ளிகளைத் திறக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு வகுத்து கொடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம்.
இக்கட்டான காலகட்டங்களில் மாணவர்களுக்குத் தேர்வு பயம் எழக்கூடாது என்பதற்காக, இதற்கு முன்னர் ப்ளூ பிரிண்ட் அரசால் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, அந்த முறை பின்பற்றப்படுவதில்லை. ஆனால், கரோனா அச்சுறுத்தலுக்குப்பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தமாகும் விதமாக அவர்களை மனரீதியில் தயார் செய்யும் வகைக்கு தேர்வு குறித்த ப்ளூ பிரிண்ட் அரசு வழங்கினால் நன்று.
மேலும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசு இ-பாக்ஸ் திட்டத்தின் மூலமாக நீட் தேர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் பல பள்ளி மாணவர்கள் அரசின் இ-பாக்ஸ் திட்டத்தின் மூலமாக நீட் தேர்வு பயிற்சியினை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து அரசு தெளிவான நடைமுறையைக் கொண்டு வர வேண்டும்.
ஆன்லைன் கல்வியை கல்லூரி மாணவர்கள் தொடர்வதற்காக மூன்று மாத காலத்திற்குத் தினமும் 2 ஜிபி அளவு இலவச இணையசேவை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே சலுகையினை தற்பொழுது ஆன்லைன் கல்வி பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கரோனாவால் வேலை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசு ரத்து செய்ய வேண்டும். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஒரு ஏக்கம், ஏழைப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இருந்து வருவதை நிவர்த்தி செய்யும் பொருட்டு வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு அரசு இலவசமாக செல்போன் வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளைத்தொய்வின்றி நடத்த கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்து நிரப்பிட வேண்டும். தற்பொழுது தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில் மாணவர்களுக்குத் தேர்வில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தேர்வு தேதியை முன்கூட்டியே வெளியிட வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி