நாளை நடைபெற உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருடன் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “அதிமுகவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணித்தோம். வரும் தேர்தலில் சமகவின் வாக்கு விகிதம் என்ன என்பதை தெரிந்து கொள்ள தனி சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.
எனவே இம்முறை இரண்டு அல்லது மூன்று சீட்டுகளுக்காக கூட்டணியில் இருந்து போட்டியிடப் போவதில்லை. தமிழகத்தில் எங்களுடன் இணைந்து அமையப்போகிற அணி பிரதான அணியாக இருக்கும். வரும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, அடுத்து அமையும் ஆட்சியை தீர்மானிக்கும் அளவுக்கு எங்கள் அணி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை கண்டிப்பாக இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும். ராதிகா சரத்குமார் மற்றும் கட்சியினர் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த முக்கிய முடிவுகள் நாளைய பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும். மேலும் நாளை முக்கிய முடிவுகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன” என்றார்.
இதையும் படிங்க: டிடிவி, கமலுடன் மூன்றாவது அணியா?