தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் வசித்துவரும் பால்பாண்டிக்கு வயது 57. இவருடைய மனைவி சின்னத்தாய். இந்த தம்பதிக்கு ஏழு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்துவருகின்றனர். பால்பாண்டி ஊரில் நாட்டு வைத்தியம் பார்த்துவருகிறார். அதனூடே சும்மா இருக்கும் நேரங்களில் வீணாகப் பொழுதைக் கழிக்கக் கூடாதென்று பனை ஓலை கொண்டு பல சாதனை சிற்பங்களையும் அவர் படைத்து வருகிறார்.
பனையோலையில் அசாத்திய படைப்புகள்:
பனை ஓலை கொண்டு பெட்டிகள், பைகள், கூடை, விளையாட்டுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், தோரணங்கள், மாலைகள் என செய்வதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் பனை ஓலையால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அச்சு அசலாக உருவெடுத்து வைத்திருக்கிறார் பால்பாண்டி. இது தவிர சுமார் 7 அடி உயரத்திற்கு மேடையில் ஏறி நிற்கும் அமைப்பில் முழு உருவக் காமராஜர் சிலையை முற்றிலும் பனை ஓலையால் மட்டுமே செய்து அசத்தி இருக்கிறார் பால்பாண்டி. மேலும் திருச்செந்தூர் கோயில் கோபுரம், கிறிஸ்தவ ஆலயம், விவசாயத்தில் ஈடுபடும் ஆண், சோறு சுமந்து செல்லும் பெண், பனைமரம், மாடு, ஒட்டகம், எம்ஜிஆர் சமாதி, உதயசூரியன், மாட்டுவண்டி, பனையேறும் தொழிலாளி உள்படப் பலவற்றையும் பால்பாண்டி பனை ஓலையால் மட்டுமே செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தன்னை விவரிக்கும் பால்பாண்டி:
நான் பனையேறும் தொழிலாளி. சிறு வயதிலிருந்தே பனை தொழில்களைச் செய்துவந்தேன். ஒரு முறை பனைமரம் ஏறுகையில் எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு இனி மரம் ஏற முடியாது என்ற அளவிற்குப் போய்விட்டது. ஒரு சமயம் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக நான் எனது சக கூட்டாளிகளுடன் சென்றிருந்தேன். அந்தச் சமயம் என் கையில் காசு இருந்தால் நான் செலவழித்து விடுவேன் எனப் பயந்து என்னுடன் வந்தவர்கள் எனக்குக் காசு எதுவும் கொடுக்காமல், திடீரென ஊர் திரும்பி வந்துவிட்டனர்.
முயற்சிக்கு வித்திட்ட சம்பவம்:
அப்பொழுது திடீரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகிலிருந்த பொட்டல் காட்டுக்குச் சென்றேன். அங்கு நின்றிருந்த பனை மரத்தின் மீது வேகமாய் ஏரி பனை ஓலைகளை வெட்டி கீழே போட்டு அங்கிருந்தபடியே ஓலைப் பெட்டிகள் முடைந்தேன். முடைந்த ஓலைப்பெட்டிகளைத் திருவிழா நடைபெற்ற கோயில் வாசலுக்குக் கொண்டு வந்து விற்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமோ என்னவோ நான் முடைந்த ஓலைப் பெட்டிகள் அனைத்தும் விற்றுவிட்டது. கைநிறைய காசும் சேர்ந்துவிட்டது. அதன் பிறகு நானும், எனது நண்பரும் அங்கு வயிறார சாப்பிட்டுவிட்டு மீதி பணத்தை வைத்துக்கொண்டு ஊர் திரும்பி வந்தோம்.
மனமுவந்த சாதனை:
எவ்வளவுதான் என் எண்ணத்தில் தோன்றிய பொருள்களை நான் பனை ஓலையால் செய்தாலும் ஒரு முழுமையான திருப்தி என்பது எனக்கு ஏற்படவே இல்லை. அப்படி இருக்கையில் நான் மிகவும் நேசித்த தலைவர் காமராஜர். அவரை பனை ஓலையால் முழு உருவச் சிலையாக வடிக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தேன். கால்,கை,சட்டை,வேஷ்டி,துண்டு,தலை என அனைத்தையுமே தனித்தனியாகப் பனை ஓலையால் மட்டுமே செய்து சேர்த்து வைத்து வண்ணம் தீட்டினேன். காமராஜரின் முழு உருவ பனையோலை சிற்பத்தைச் செய்து முடித்த பிறகே எனக்கு அந்த திருப்தியை எட்டிய ஆனந்தம் கிடைத்தது.
அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கை:
அடுத்தடுத்து இதுபோல் தலைவர்களை நான் விரும்பும் வகையில் செய்து காட்சிப்படுத்த ஆவலாக உள்ளேன். பனைபொருள் மாற்றுத் தொழில் கொண்டவர்களுக்கு அரசு நிதியும், ஊக்கமும் அளித்து உதவி செய்ய வேண்டும். என்னைப் போல பலரும் பனை ஓலையால் மாற்றுத் தொழில் செய்துவருகின்றனர். அவர்களுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி அரசு உதவி செய்யுமெனில் பல திறமையான நபர்களை உருவாக்க முடியும் என்றார்.