கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த கோபால் - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் மாரிசெல்வி (13). திக்கு வாய் பாதிப்பு இருந்த மாரிசெல்வி மந்தித்தோப்பில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நேரத்தில், திடீரென அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனை அடுத்து, 2012ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரிசெல்வியின் மீது, அவரது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். தீக்காயமடைந்த மாரிசெல்வி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அக்டோபர் 1 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரளித்த மரண வாக்குமூலத்தில், தனது தாய் ராஜேஸ்வரி தீ வைத்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் ராஜேஸ்வரியை கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.