தூத்துக்குடி: வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு, சேமிப்பு கிடங்கைத் திறந்துவைத்துக் குத்துவிளக்கேற்றினார். பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “நடிகர் ரஜினியும், கமல்ஹாசனும் ஒன்றாக இணைந்தால், ரசிகர்கள் படம் பார்க்க மட்டும்தான் கூடுவார்கள். இதனால் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாகலாம், மக்கள் விரும்பினால் மட்டும்தான் அரசியலில் வெற்றிபெற முடியும்.
கமலைப் பொறுத்தவரை அரசியல் தெரியாமல் ஏதோ பேசுகிறார். அதிமுக ஆரம்பித்து 49 ஆண்டுகளில் பத்து பொதுத் தேர்தலைச் சந்தித்து அவற்றில் 7இல் வெற்றி கண்டுள்ளது. மூன்று முறைதான் திமுக வென்றுள்ளது.
அதிலும் ஒருமுறை இரட்டை இலை சின்னத்தை இழந்து இரண்டு பிரிவுகளாக நின்றதனால் திமுக வெற்றிபெற்றது. 49 ஆண்டுகால வரலாற்றில் 37 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்ற கட்சி அதிமுகதான்.
மூன்றாவது அணி அல்ல, 5 அணி அமைத்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும். இதேபோன்று கடந்த காலத்தில் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டது. 234 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக தன்னந்தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருந்தாலும் அரசியல் ரீதியாகப் பார்த்தால் அதிமுகவிற்கு மட்டுமே அவர் சொந்தம்” என்றார்.