தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வழங்கும் கொள்கலன் நிறுவப்பட்டுள்ள நிலையில், ரூ.48 லட்சம் மதிப்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ஆக்சிஜன் கொள்கலனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநரிடம் ஊழல் பட்டியலை கொடுத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ”பிரிக்க முடியாதது திமுகவும் ஊழலும்தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். திமுக மூன்றெழுத்து, அதுபோல் ஊழலும் மூன்றெழுத்து. எனவே 96 பக்கமல்ல 96 லட்சம் பக்கம் கொடுத்தாலும் கடுகளவு கூட அதில் உண்மையில்லை” என்றார்.
தொடர்ந்து, கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுப்பதாக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், ”அவருக்கு அரசியல் என்றால் என்னவென்றே புரியவில்லை. மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு கொடுக்கிறோம். அதில் குற்றம் குறை சொல்பவர்களை ஒன்றும் அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுக பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளது'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி