தூத்துக்குடியில் சீர்மிகு நகரம் பணியையொட்டி கடந்த சில மாதங்களாக சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குளத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. எடுத்த எடுப்பிலேயே சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குளம் 20 அடி ஆழம் இருக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி (52) சலவைத் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் (பிப். 8) தனது ஏழு வயது பேரனுடன் அக்குளத்திற்குத் துணிதுவைக்கச் சென்றார்.
ஏற்கனவே நீர்ப்பாங்கான இடம் என்பதால் ஆழப்படுத்தும் பணியின்போது ஏற்பட்ட சேறு சகதிகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் அங்கு துணிதுவைக்கச் சென்ற கருத்தபாண்டி பேரனை கரையில் உட்கார வைத்துவிட்டு தண்ணீருக்குள் இறங்கி துவைக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் குளத்தின் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த கருத்தபாண்டி உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். ஆனால் அச்சமயத்தில் யாரும் அருகில் இல்லாததால் கருத்தபாண்டி நீரில் மூழ்கி இறந்தார். இந்தச் சம்பவம் சலவைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கருத்தபாண்டியின் உறவினர்கள் அவரது மரணத்திற்கு நிவாரணம் கேட்டு நேற்று (பிப். 9) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், பொதுமக்களிடம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து அவர், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் செல்போனில் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்துதர வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரின் மனைவிக்கு கைம்பெண் உதவி ஓய்வூதியம் பெற்றுத் தருவதற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி பெற்றுத் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குளத்தில் எச்சரிக்கைப் பலகையை வைத்து சுற்றுச்சுவர் கட்டித்தருவதற்கும் மாநகராட்சி அலுவலர்களுக்குப் பரிந்துரைசெய்வதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் கூடியிருந்த கருத்தபாண்டியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:'ரியல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்!'