தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளான எழில்நகர், கோவில் பிள்ளைவிளை, குமரன் நகர், லூர்தம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது.
பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் சிலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தருணத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அவரிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகர ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன் கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது, “தூத்துக்குடியில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிகப்படியான அளவு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும் என தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி இருந்தாலே தற்போது இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே இதற்கு காரணம்” என்றார்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டிலேயே அதிகப்படியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பாதிக்கப் படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 37 இடங்களில் உள்ள மக்களின் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.