மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்கப்படும் - கனிமொழி எம்.பி., பேச்சு! - மீன்பிடித்தடைக் காலம்
தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும், அவர்களுக்கென தனி வங்கி உருவாக்கப்படும் என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவகளுக்கான நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழக்கினார்.
கூடுதல் படகு அணையும் தளசுவர்
தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளச்சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கனிமொழி எம்.பி., தலைமையில் (ஜூன் 26) இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் முன்னிலை வகித்தனர்.
அந்நிகழ்ச்சியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில், கூடுதல் படகு அணையும் தள சுவர் அமைக்கும் பணிகளுக்கு கனிமொழி எம்.பி., அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மீனவர்களுக்கு மானிய விலையில், நாட்டுப்படகில் வெளியே பொருத்தும் இயந்திரத்தை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மீனவர்களுக்கென தனி வங்கி
பின்னர் பேசிய கனிமொழி எம்.பி., "தமிழ்நாட்டில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிவர்த்தி செய்து கொடுக்கும் அரசாக, திமுக அரசு செயல்படுகிறது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, தற்பொழுது ஆளும் அரசாக மாறியிருக்கும் போதும் மீனவர்களின் குறைகளை கேட்டு சரி செய்யும் அரசாகத் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இன்று தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தள சுவருக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகில் வெளி பொருத்தும் இயந்திரங்களும் அரசு மானிய விலையில் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல திட்டங்களை மீனவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும். மீனவர்களின் கோரிக்கைப்படி விரைவில் மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடித்தடைகாலத்தில் வழங்கப்படும் ரூ. 5000 நிவாரணத் தொகை விரைவில் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றார்.
குளிர் பதனக்கிடங்கு
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மீனவர்களின் நலனுக்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விரைவில் மீன்களைப் பதப்படுத்தி பாதுகாக்கும் குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தித் தரப்படும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அலுவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற 2.5 டன் மஞ்சள் பறிமுதல்: 5 பேர் கைது