தூத்துக்குடி: கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு விழா நேற்று (மே. 29) நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்த பிரதமர் 21,000 ஆயிரம் கோடி ரூபாயில் ஆன பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.
பாரத பிரதமர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து வைப்பதற்கு வருகை புரிவது வழக்கம். அதேபோலத்தான் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக தற்போது பாரதப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிடப்பட்டது.
சென்னை மதுரவாயல் பறக்கும் இருவழி சாலை திட்டம் திமுக கொண்டுவந்தாலும் 2006 - 11 காலகட்டங்களில் நில எடுப்பு பிரச்சனை காரணமாக அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவுற்று மதுரவாயல் துறைமுகம் பறக்கும் புறவழிச்சாலை திட்டத்திற்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2020 இல் அதற்கான பணி தொடங்க தற்போது பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் நாளும் பொழுதும் பல்வேறு குளறுபடிகளாகத்தான் உள்ளது. பத்திரிகை ஊடங்களை பார்த்தாலே தெரிகிறது. மக்களுக்கு வரிச்சுமை நிர்வாகச் சீர்கேடு இதற்கு உதாரணமாக கோவில்பட்டி நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது எல்லாமே நிர்வாகச் சீர்கேடு தான் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும்.
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலான 138 சாலைகள் இத்திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக இரட்டை தலைமையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. எதுவாக இருந்தாலும் பொதுக்குழு தான் முடிவு செய்யும் பொதுக்குழு கூட்டமும் தற்போது அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைக்காக அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்து மக்களின் எதிர்ப்பை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்தோம். குறிப்பாக தீப்பெட்டி தொழிலாளர்கள் பிரச்சனையாக இருந்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசின் கவனத்தை ஈர்த்தோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- எ.டி.எஸ். பி உட்பட 3 பேர் காயம்!