தூத்துக்குடி: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் திருக்கோயில் 25ஆம் ஆடி மாதம் கொடை விழா அண்ணா தொழிற்சங்கம் சார்பில் இன்று (ஆக.9) நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு குறித்து கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார். வருவேன் என்பார்; பின்னர் இல்லை என்று கூறுவார். இதே தான் கூறி வருகிறார். முன்பு தேர்தலில் கூட, அதிமுகவிற்கு எதிராக குரல் கொடுத்தார்.
ஆளுநருடன், ரஜினி அரசியல் பேசினாரா? பின்னர் அரசியல் வேண்டாம் எனக் கோரி, ரசிகர் மன்றத்தை சந்திப்பார். பின்னர், ரசிகர் மன்றத்தை மாற்றுவார். இதேநிலையை தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், இப்பொழுது ஆளுநரை சந்தித்துவிட்டு அரசியல் ரீதியாக பேசினேன் எனக் கூறியுள்ளார். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அரசியல் குறித்து பேசினேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் தான் விளக்கம் அளிக்கவேண்டும்.
வேண்டுமெனில் ஓபிஎஸ் சசிகலாவுடன் பயணிக்கட்டும்: ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் யாருடன் இணைந்து செயல்பட்டாலும், எங்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். இதற்குப் பின், அவர் சசிகலாவுடன் இணைந்து பயணிக்கலாம். இல்லையென்றால் திமுகவுடன் கூட இணைந்து பயணிக்கலாம்; யாருடனும் பயணிக்கலாம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், நிலைபாடு குறித்து நாங்கள் கருத்து சொல்ல இயலாது.
அதிமுக கூட்டணி-வெற்றிக் கூட்டணி: தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம், தேர்தலாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். எங்களோடு கூட்டணியில் இருக்க நினைக்கிறவர்கள், எங்களது தலைமையை ஏற்றுக் கொள்பவர்களை கூட்டணியில் சேர்ப்போம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அதிமுகவின் தலைமையை ஏற்று, யார் எங்களுடன் பயணிக்க இருக்கிறார்களோ, அவர்களுடன் எங்கள் கூட்டணி அமையும்; அது வெற்றி கூட்டணியாக இருக்கும்.
தமிழக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் விவாதிப்பதில்லை: விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம். தமிழகத்திலிருந்து 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை இங்கிருந்து சென்ற உறுப்பினர்கள் விவாதிப்பது கூட இல்லை. இதற்கு உண்டான பதிலை அளிக்கும் நிர்மலா சீதாராமனின் விளக்கத்தைக் கூட கேட்பது இல்லாமல் வெளிநடப்பு செய்து வருகின்றனர். எந்த ஆக்கபூர்வமான விவாதத்திலும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கற்பதில்லை.
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் வருவது குறித்த கேள்விக்கு, இதை வரவேற்கிறோம். இது சொல்லில் இல்லாமல் செயல்பாட்டில் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பிடியில் இருந்துவிலகி ராஜினாமா; ஒரே நாளில் எதிர்க்கட்சியுடன் கூட்டுசேர்ந்து முதலமைச்சராகும் நிதிஷ்!