புரெவி புயலை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் (டிச. 07) விடிய விடிய கனமழை தொடர்ந்ததால் மாநகரப் பகுதிகளில் கால்மூட்டு அளவுக்கு மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பழைய மாநகராட்சி சாலை, காசுக்கடை பஜார், ரயில் நிலைய சாலை, திருச்செந்தூர் சாலை, பிரையன்ட் நகர், பி அண்ட் டி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல முக்கிய இடங்களிலும் கதிர்வேல் நகர், ராஜீவ் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
மாநகராட்சியின் சார்பில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகின்றன. இருப்பினும் விட்டுவிட்டு கனமழை பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, எட்டையபுரத்தில் அதிகபட்சமாக 25 மி.மீ. மழை பெய்துள்ளது. இதைப்போல மாவட்டத்தின் பிற பகுதிகளான காயல்பட்டினம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், வைப்பார் சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 93.60 மி.மீ. மழையும், சராசரியாக 4.93 மி.மீட்டரும் மழையும் பெய்துள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்