தூத்துக்குடி: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மதுரை - திருவனந்தபுரம் இடையில் லாரி சர்வீஸ் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமான லாரியின் மூலமாக மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பழங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி, நேற்று (செப்.03) இரவும் வழக்கம்போல் சக்திவேல் மினி லாரியில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பப்பாளி, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பழங்களை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரத்திற்குச் சென்றார். இந்த மினி லாரியை திருப்பரங்குன்றத்தினைச் சேர்ந்த ரமேஷ் ஓட்டியுள்ளார்.
அவருடன் மதுரை சிம்மக்கலைச் சேர்ந்த க்ளீனர் கிருஷ்ணனும் உடன் இருந்துள்ளார். மினி லாரி இன்று (செப்.04) அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.
பழங்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள்
இதில் ரமேஷ், கிருஷ்ணண் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பழங்கள் அனைத்தும் சாலைபகுதியில் சிதறின. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புதூர் காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் லாரி உரிமையாளர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட பின்னர் பழங்களை இனி கொண்டு செல்ல முடியாது என்பதால் அப்பகுதி மக்களை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினார். உடனடியாக அப்பகுதி மக்கள் மூட்டை மூட்டையாக பழங்களை கட்டிச் சென்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நாலாட்டின்புதூர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை விபத்து இறப்பு விகிதம் குறைப்பு