தூத்துக்குடி: பெரு விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள், இதர விவசாயிகள், உள்ளிட்டவர்களுக்கு வேளாண் விற்பனை உறுப்பினர் பதவி வழங்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் அமைச்சரான சி.த. செல்லப்பாண்டியனை, வேளாண் விற்பனை குழு உறுப்பினராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இந்த பதவி காலம் மூன்று ஆண்டுகள்.
வேளாண் விற்பனை குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கக்கூடிய பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி சி.த.செல்லப்பாண்டியனை வேளாண் விற்பனை குழு உறுப்பினராக அரசு நியமித்ததுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்ட நிர்வாகிகள் மாற்றத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் புதியவர்களுக்கு இடம் அளிக்கும் பொருட்டு பழைய நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். அதன்படி, தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த சி.த.செல்லபாண்டியனின் பதவிபறிக்கப்பட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், திருவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சண்முகநாதனும், வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் நியமிக்கப்பட்டனர். மாநகர, நகர பகுதிகளிலும் புதியவர்களே பதவியில் நியமிக்கப்பட்டனர். புதிதாக பதவியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் தெற்கு மாவட்ட செயலாளர், சண்முகநாதனுக்கு வேண்டியவர்கள் என்று கூறப்பட்டது.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியனுக்கும் - சண்முகநாதனுக்கு இடையே இலைமறை காயாக பூசல் இருந்து வந்த நிலையில், அதிமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தில் சி.த.செல்லபாண்டியன் உள்பட அவரது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சி.த. செல்லபாண்டியன் தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இது அப்போது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான செல்லப்பாண்டியன் அடிப்படையில் பெரும் வணிகரும் கூட. வணிகர் சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வருவதாலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நன்கு அறிமுகமானவர் என்பதாலும் அவர் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பான முடிவு எடுக்கப்படும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக தலைமையுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் சி.த. செல்லபாண்டியனுக்கு கட்சி ரீதியாக முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தலைமை உறுதியளித்ததனால் சமாதானம் ஏற்பட்டு ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுக தலைமையளித்த இந்த உறுதியை காப்பாற்றும் பொருட்டும், சி.த.செல்லப்பாண்டியனை சமாதானப்படுத்தவுமே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் விற்பனை குழு உறுப்பினராக, அவரை கட்சி தலைமை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக அதிமுகவினரிடையே இருந்துவந்த மனக்கசப்பு சரிசெய்யப்படும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்
இதையும் படிங்க: 'திரையரங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ