இந்திய அளவில் பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று தொடங்கியது. போட்டிகளைத் துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், “இந்திய அளவில் உள்ள பெரிய துறைமுகங்களுக்கிடையேயான கால்பந்து போட்டி தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கொல்கத்தா, மும்பை, பாரதீப், கொச்சின் உள்பட 7 பெரிய துறைமுக அணிகளைச் சேர்ந்த 140 வீரர்கள் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர். இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி 29ஆம் தேதிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
பசுமைக்காக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஐந்து மெகாவாட் திறனுடைய சூரியசக்தி மின்விளக்கு நிறுவப்பட உள்ளது. 100 மீட்டர் உயரத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.
140 கி.வா. மின் உற்பத்திக்கு மேற்கூரைகளில் சூரியசக்தி மின் உற்பத்தி தகடுகள் பதிக்க முயற்சி எடுத்துவருகிறோம். கடந்தாண்டு 34 மில்லியன் டன் அளவு சரக்கு கையாளப்பட்டது. இந்த ஆண்டு 40 மில்லியன் டன் அளவுக்குச் சரக்குகளைக் கையாள திட்டமிட்டுள்ளோம்.
துறைமுக நுழைவு வாயிலை 153 மீட்டரிலிருந்து 250 மீட்டராக அகலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த அனைத்து திட்டங்களும் ரூ.2000 கோடி செலவில் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னை, மும்பை, புதுச்சேரி போன்ற இடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. தூத்துக்குடியிலும் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு திட்டங்கள் தீட்டிவருகிறோம்” என்றார்.