தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிஸான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 65 ஆயிரத்து 953 விவசாயிகளில், இத்திட்டத்தின் மூலமாக 47 ஆயிரத்து 424 விவசாயிகள் இந்த அட்டையை பெற்றுள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் 48 சிறப்பு முகாம்கள் மூலமாக விடுபட்ட விவசாயிகளையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிஸான் கிரெடிட் கார்டு அட்டை மூலமாக விவசாயிகள் எந்த பிணையும் இல்லாமல் 4 விழுக்காடு வட்டியில் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கால்நடைகளுக்கு கூடுதலாக 2 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாடு, ஒரு கார்டு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 289 பேர் பரிவர்த்தனைகள் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 57 பயனாளிகள் தூத்துக்குடியில் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருள் பெற்றுள்ளனர்.
இணையதள சேவை குறைபாடு உள்ள இடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் மாவட்டத்தில் உடனடியாக செயல்படுத்தபடும் என்றார்.