தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாடு மீன் வளம்,மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், "கரோனா தொற்று அதிகமாகப் பரவி வரும் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டமும் ஒன்று. இந்த முறை ஊரடங்கை நாம் முறையாக செயல்படுத்துவதன் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். இருப்பினும், ஊரடங்கால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு தடுக்க காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை கூட்டுறவுத் துறை மூலமாக, நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தின் மூலம் வழங்கவும், காய்கறிக் கடைகள் வைத்துள்ளவர்கள் விரும்பினால் நடமாடும் காய்கறி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும்" எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை பயன்படுத்தி தேவையின்றி வெளியே வரக்கூடாது. முறையாக ஊரடங்கு விதிகளை கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 16 ஆயிரம் படுக்கைகளை கூடுதலாக அரசு அமைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீனவர்களுக்கு ரூ.5000 நிவாரணம்
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தற்போது 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது.
இந்தத் தடை காலத்தில் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 5000 ரூபாய் தடைக்கால நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
எனவே, நிவாரண உதவிகள், நாளை (மே 24) அல்லது நாளை மறுதினம் (மே 25) முதல் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்றார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஷரண்யா அரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு