தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொடர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 120 பேருக்கு அவர்கள் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
அதைப்போன்று வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 30 பேரை கண்டுபிடித்துள்ளோம். அவர்களின் விவரம் குறித்து கண்டறிவதற்காக காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்காணிப்பில் உள்ள அனைவருக்கும் தினமும் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் முக்கிய அலுவலர்கள் இடம்பெறும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முகமூடி, கிருமி நாசினி (சேனிடைசர்) கைகளைக் கழுவும் திரவங்கள் ஆகியவை சுய உதவிக் குழுக்கள் மூலம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற வணிக நிறுவனங்களை அடைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: