கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (44). மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர், தனது வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவம் நடத்திவந்தார். சின்னத்துரை வழக்கம்போல புதன்கிழமை மாட்டுத் தொழுவத்தில் இரண்டு பசுமாடுகளை விட்டுச் சென்று, வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். இந்நிலையில், இரு மாடுகளின் மீதும் மின்சாரம் தாக்கியதால் அவை இரண்டும் இறந்துள்ளன. இதனையறியாமல் சின்னத்துரை இரண்டு மாடுகளும் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து, மாடுகளை தூக்க முயன்றிருக்கிறார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவரும் உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் தொழுவத்தில் வந்து பார்த்தபோது, மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகளும் சின்னத்துரையும் இறந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சின்னத்துரை உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த மாடுகளின் உடல் வில்லிசேரி கால்நடை மருந்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!