தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் கோகிலா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குக்கிடமான முறையில் சுற்றி திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ. 2 கோடி மதிப்புடைய துருக்கி நாட்டு பணம் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கோயம்புத்தூர், பேரூர் சரோஜினி நகரைச் சேர்ந்த ஜீவா (23), சுரண்டை பாரதியார் தெருவைச் சேர்ந்த விஜயமாணிக்கம் (22), கடையநல்லூர் நத்தகர் பள்ளிவாசல் பேட்டையைச் சேர்ந்த முகமது புகாரி ( 22), கடையநல்லூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (20) க்ஷ கடையநல்லூரைச் சேர்ந்த முகமது அஸ்கர் (20) ஆகியோர் என தெரியவந்தது.
அவர்களிடம் இந்திய மதிப்பில் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான 40 துருக்கி கரன்சி நோட்டுகள் இருந்தது. இவை அந்நாட்டில் 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதை வைத்து இவர்கள் மோசடியில் ஈடுபட திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தெர்மல்நகர் காவல் ஆய்வாளர் கோகிலா தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.