தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு நபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாகக் கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான காவல் துறையினர், அவரை பிடித்து கியூ பிரிவு காவல் நிலைய அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோரன் (47) என்பது தெரியவந்தது. இவர் இந்திய வாழ் வெளி நாட்டினருக்கான, ஓ.சி.ஐ. அட்டை வைத்திருந்தார். இது தவிர 2 இங்கிலாந்து பாஸ்போர்ட், ஒரு இந்திய பாஸ்போர்ட், இந்திய, இலங்கை பணமும் வைத்திருந்தார்.
கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்த அவர், பின் வாடகை கார் மூலம் கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அங்கிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல விடுதியில் தங்கியுள்ளார். இதற்காகக் கடற்கரையில் நின்றபோது கியூ பிரிவு காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளார்.
பாஸ்போர்ட் முறைகேடு
2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை, கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் 226 கிலோ கேட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜோனாதன் தோரன், பின்னர் பரோலில் வெளியில் வந்துள்ளார். இவர் தாய்லாந்து, வியட்நாம், பாங்காக், சீனா, ஆப்பிரிக்கா உள்பட 60 நாடுகளுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
கரோனா பரிசோதனை
அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக, நள்ளிரவே அவர், சென்னை கொண்டு செல்லப்பட்டு இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு நீதிபதியின் விசாரணைக்கு பின்னர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
சிறையில் அடைப்பு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோனாதன் தோரன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர் என்பதால் அவர்மீது வேறெந்த நாடுகளிலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? அவருடன் தொடர்பில் உள்ள போதை கும்பல்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து கியூ பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.