தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கரோனா பணிகளை ஆய்வு செய்யவும், அரசின் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், முடிவடைந்த திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகவும் இன்று (நவ.11) தூத்துக்குடி சென்றார். இதற்காக மாவட்ட அதிமுக சார்பாக, தோரணங்கள், கட்சிக் கொடிகள், வரவேற்பு விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், திமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில், முதலமைச்சரின் வருகையைக் கண்டித்து தெற்கு மாவட்ட பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தூத்துக்குடியில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூறுவதற்காக, வராத முதலமைச்சர், சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் கொலை வழக்கின் பொழுது ஆறுதல் கூற வராத முதலமைச்சர், சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டதற்கு அவரது குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு தருவதாகக் கூறி, தற்போது வரை வழங்காத முதலமைச்சர் எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சுவரொட்டி விவகாரம், இரு கட்சிகளிடைய பெரும் சலசலப்பையும், காவல் துறையினரிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் துறையினர், முதலமைச்சர் வருகையைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளைக் கிழித்தும், ஒட்டப்படாத சுவரொட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விர்ச்சுவல் காப் : பொதுமக்களுடன் உறவை மேம்படுத்த காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி !