தூத்துக்குடி: கூட்டாம்புளியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகன் (44) என்பவரை கொலை வழக்கில் கைது செய்ய சென்ற இடத்தில் காவல் துறையினருக்கும், துரைமுருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தற்காப்புக்காக காவல் துறையினர் துரைமுருகனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்தில் காவல் துறையினர் தரப்பில் உதவி ஆய்வாளர் ராஜ் பிரபு, ஆயுதப்படை காவலர் டேவிட்ராஜ் ஆகியோருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரணை
இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், என்கவுன்ட்டர் குறித்து தூத்துக்குடி மாவட்ட 2ஆம் எண் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமாதேவி நேற்று (அக்.16) நேரில் விசாரணை நடத்தினார்.
காலையில் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்த கோவளம் கடற்கரை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்திய அவர் அங்கு தடயங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உதவி ஆய்வாளர் ராஜ் பிரபு, காவல் டேவிட் ராஜா ஆகியோரிடம் ரவுடி துரைமுருகனுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்.
காவல் துறை திட்டமிட்டு கொலை
இதனையடுத்து துரைமுருகனின் தாய் சந்தனமாரி, உடன்பிறந்த சகோதரிகளான கன்னியம்மாள், கோரம்பள்ளத்தை சேர்ந்த 2ஆவது அக்கா ராமலட்சுமி அவருடைய கணவர் கண்ணன், 3ஆவது அக்கா ராதாலட்சுமி அவருடைய மகன் உதயகுமார், கடைசி அக்கா குரங்கனியைச் சேர்ந்த முனீஸ்வரி அவருடைய கணவர் முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தார்.
அப்போது, துரைமுருகனின் குடும்பத்தினர் காவல் துறையினர் திட்டமிட்டு துரைமுருகனை கொலை செய்ததாக கதறி அழுதனர். பின்னர், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த துரைமுருகன் உடலை பார்வையிட்டு ஆவணங்களை பதிவிட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக மருத்துவர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விளக்கம் பெற்ற அவர், அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, துரைமுருகனின் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரவுடி சுட்டுக்கொலை