தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை பகுதியில், கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கன்னியாகுமரியிலிருந்து 10(18.52 கி.மீ) கடல்மைல் தொலைவில், இலங்கையை சேர்ந்த ஆறு பேருடன் ஒரு படகு வருவதைப் பார்த்தனர். சந்தேகம் அடைந்த கடலோர காவல்படையினர் படகில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விசைப்படகில் சுமார் 100 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய தீவிரத் தேடுதலில், 20 சிறிய பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 3 கிலோ கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் போதைப்பொருளையும், 5 துப்பாக்கிகளையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு, ரூ.500 கோடி என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து 2 சாட்டிலைட் செல்போனையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். ப்ரீபெய்டு வகையைச் சேர்ந்த இந்த செல்போன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் கடலோர காவல்படையினர், 6 பேரையும் கைது செய்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கைது செய்து அழைத்து வரப்பட்டவர்களிடம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், தென்மண்டல இயக்குனர் புருனோ, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஜெயக்குமார், ரா உளவுப்பிரிவு அதிகாரி சார்லஸ் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 6 பேரும் இலங்கை, நீர்க்கொழும்பைச் சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல்(40), வானகுல சூரியஜீவன்(30), சமீரா(32), வர்ணகுலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா(29), நிசாந்த் கமகே, லட்சுமணகுமார் (37) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆறு பேரும், நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு படகை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போதைப்பொருட்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் கடல் பகுதிக்குச் சென்று உள்ளனர்.
அதே நேரத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு பாய்மரப் படகில் போதைப்பொருளை ஏற்றி வந்து, நடுக்கடலில் வைத்து இவர்கள் படகிற்கு மாற்றியுள்ளனர். பிறகு ஆறு பேரும் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் இந்திய கடல் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக படகின் ஒரு டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டு உள்ளது.
இதனால் டீசல் காலியானதால் மேற்கொண்டு படகை இயக்க முடியாமல் தவித்தவர்களின் படகு காற்றின் வேகத்தால் இந்திய கடல் பகுதிக்குள் வந்துள்ளது. அப்போது கடலோர காவல்படையினரிடம் பிடிபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படையினர், கைது செய்யப்பட்ட ஆறு பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று ஆறு பேரிடமும் விசாரணை நடத்தினர். இவர்கள் மீது மதுரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விசாரணையில் எடுத்து விசாரிக்க, மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஆறு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் ஆறு பேரும் தூத்துக்குடி இரண்டாம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமாதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி போதை பொருள் வழக்கு: 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை!