தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்பட எட்டு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடியில் இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அவசரகால தேவைக்காக நான்கு மாதங்களுக்கு மட்டும் திறந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் நான்கு மாதங்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கவும், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர வேறு எதுவும் நடைபெறக் கூடாது எனவும், இதனைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக்குழு நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் தலைமையில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர்.
தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, வஜ்ரா வாகனமும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும், தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வந்திருந்த 11 பேர், திடீரென மாவட்ட ஆட்சியர் வாசல் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்களைக் கைது செய்து அசோக் நகரில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.