தூத்துக்குடி: சந்தை ரோடு மற்றும் கால்டுவெல் காலனி பகுதியில் அம்மா மினி மினி கிளினிக்குகள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் திறக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமாக அம்மா மினி கிளினிக் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப்படும் என முதலமைச்சர் கே பழனிசாமி அறிவித்திருந்தார். முதற்கட்டமாக 600க்கும் மேற்பட்ட மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி சந்தை ரோடு மற்றும் கால்டுவெல் காலனி பகுதியில் அம்மா மினி மினி கிளினிக்குகள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் திறக்கப்பட்டன.
தொடர்ந்து, தேர்தல் பரப்புரைக்காக ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்கிறார். அதுகுறித்த ஏற்பாடுகளை செய்ய நிர்வாகிகளுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் 100 விழுக்காடு நிறைவேற்றித் தந்துள்ளது. அதுதவிர தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படாத வாக்குறுதிகளாக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக அம்மா மினி கிளினிக்குகள் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்பட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.
மக்களின் ஏகோபித்த ஆதரவு அதிமுகவுக்கு இருக்கின்ற நிலையில் அதிமுகவை விமர்சிப்பதன் மூலமாக தினசரி நாளிதழ்களில் கமல்ஹாசனைக் குறித்த செய்தி வந்துகொண்டே இருக்கவேண்ட்டும் என்பதற்காக அதிமுக அரசினை விமர்சித்து வருகிறார்.
எங்களை விமர்சிப்பதன் மூலம் அவர் பெரிய ஆளாகி விடலாம் என நினைக்கிறார். அதிமுக அரசை மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமரவைக்க மக்கள் தயாராகிவிட்ட நேரத்தில் கமல்ஹாசனை குறித்து பேசி, அவரை வளர்த்து விடுவதற்கு விரும்பவில்லை” என்றார்