தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான நத்தம் விசுவநாதன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பனுடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஊராட்சிப் பகுதி ஒன்றியச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும் தேர்தலில் அதிமுக வெற்றிபெறுவது குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு அவருடைய பொற்கால ஆட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்துவருகிறது.
நிச்சயமாக 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக முடிவுசெய்து அறிவித்ததும், மக்களும் அடுத்த முதலமைச்சர் அவர்தான் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
மக்களுக்கான தேர்தல் பரிசுகள்
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவந்த இடத்தில், தற்பொழுது 2500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் உள்ளனர்.
இது ஆரம்பகட்ட அறிவிப்புதான் இன்னும் ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் பல்வேறு திட்ட அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்படும். எனவே மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கின்ற அதிமுக அரசு அரசே மீண்டும் தமிழ்நாட்டில் வெற்றிபெறும். எனவே திமுக தேர்தல் களத்திற்கு வராமல் இருப்பதே நல்லது.
அருமனை கிறிஸ்துமஸ் விழா
முதலமைச்சர் தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ள நேரத்தில், டிசம்பர் 22ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கு பெறவுள்ளார். இதற்காக அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தொடர்ந்து அவர் சாலை வழியாக கன்னியாகுமரி மாவட்ட அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் அவர் மீண்டும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறார். தேர்தல் பரப்புரை தொடங்கிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருவது இதுவே முதல்முறை. எனவே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.