தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை சில்லாங்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ராமநாதபுரம் மாவட்டம், அண்டக்குடி கிராமத்தினை சேர்ந்த 17 வயது பெண் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று(செப்.20) இரவு அங்குள்ள கழிவறையில் அவர் கயிற்றினால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.
பின்னர், ஆசிரியர்களுக்குத் தகவல் கொடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசுவந்தனை காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இன்று(செப்.21) காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவியின் பெற்றோரிடம் ஆறுதல் கூறினார். மேலும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஏ.டி.எஸ்.பி சந்திஸ், மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஆட்டிறைச்சியை சாப்பிட்ட நாய் - கவனக்குறைவாக இருந்த மகளை சுட்டுக்கொன்ற தந்தை