தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் உள்ள தெற்கு குப்பணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். இந்த நிலையில், நேற்றிரவு அர்ச்சனா சமையல் கட்டில் தனது மூத்த மகன் கார்த்திக் ராஜா (5) உடன் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டை வழியாக நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
அதை கவனித்த முதலாவது கார்த்திக் பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்ட முயற்சி செய்து உள்ளார். இதனால் சிறுவனை பாம்பு கடித்தது. இதையடுத்து சிறுவன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதன்பின் சிறுவனை பெற்றோர் மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஒரு கொடூரமான செயல்... 17 போலீசார் மீது நடவடிக்கைவேண்டும்... நீதிபதி அருணா ஜெகதீசன்