தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா சோனகன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 42), இவர் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அவருடைய தாயார் இன்பமணி (75) என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அப்போது இன்பமணிக்கு உடல் பரிசோதனை நடத்துகையில் 5 பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டுள்ளார். இதுகுறித்து சம்பத்குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் காவல்துறையினர் அரசு மருத்துவமனை சி.சி.டி.வியை ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத நபர் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
சிசிடிவி பதிவுகளை வைத்து எடுத்துச் சென்ற நபர் யார் என விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி கீழ தட்டாபாறை ஜோதி நகரைச் சேர்ந்த ஊர்க்காவலன் (45) என்பதும் அவருடைய மகனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்தபோது, கீழே கிடந்த தங்க தாலி சங்கிலியை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து தங்கச் செயினை பத்திரமாக மீட்டனர்.
இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இந்நிலையில் மீட்கப்பட்ட தங்க செயினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து இன்பமணியிடம் ஒப்படைத்தார். மேலும் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து, துரிதாமாக செயல்பட்டு தாலிச்செயினை மீட்ட தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராசப்பாண்டியன், தலைமைக் காவலர் மோகன் மற்றும் காவலர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.